Thursday, January 26, 2012

கலங்குவதெல்லாம் தெளிவடையவே

              கடவுள் தேடல் ஒரு தனிமனித விஷயம். அதைக் கற்றுக்கொடுக்க முடியாது. விளக்குவதற்கு எந்தப் பாடமும் இல்லை. தானாகவே யோசித்து, யோசித்து விசாரித்து, அறிய வேண்டிய விஷயம். ஆனால், இந்த விசாரிப்புக்கு சோம்பல்பட்டு மற்றவர்களுடைய போதனையைக் கேட்டு, அவ்வாறு போதனையைக் கேட்டவர்களெல்லாம் ஒரு குழுவாக மாறி, அதனாலேயே எதிர்க்குழு மீதான ஏளனங்களையும் கண்டனங்களையும் வெளியிடத் துவங்கி விடுகிறார்கள்.
                                     
            சண்டை சச்சரவுகள் இயல்பாகவே மூண்டு விடுகின்றன. ஆனால், ஞானிகள் எனப்படுவோர் மதங்களையும் மொழிகளையும் கலைகளையும் ஆசார அனுஷ்டானங்களையும் தாண்டி, தனக்குள் என்ன நடக்கிறதென்று உற்றுப் பார்த்து அதனுடைய இருப்பை உணர்ந்து, அது என்ன என்பதைத் தேடி கண்டுகொள்ள வேண்டும். இது உடனடியாக நடக்காது. மெல்ல மெல்ல தன்னுள் வரவேண்டும். சிலசமயம் பல வருடங்களாக, ஏன், பல ஜென்மங்களும் ஆகலாம்.
                    கடவுள் தேடலில் இருப்பவருக்கு விவாதம் வருவதேயில்லை. எது குறித்தும் அவர்கள் கேள்வி கேட்பதில்லை. கேள்வியும் பதிலும் இவர்களுக்குள்ளேயே புரண்டு புரண்டு ஒரு நல்ல திசைக்கு அவர்களை அழைத்துப் போகின்றன. மதங்கள், ஆசார அனுஷ்டானங்களிலிருந்து மெல்ல மெல்ல கழன்று தனியே போய் அமைதியாய் உட்கார்ந்து கொள்கிறார்கள். தனக்குள் இன்னும் ஆழ்ந்து மூழ்குகிறார்கள்.
தன்னுடைய சொந்த வழிமுறைகளை மட்டுமே பின்பற்றி, இங்கே கடவுள் உண்டு, அவர் இன்ன ரூபம், இன்னவிதமான வடிவம், எங்களுடைய பிரார்த்தனைகள் இன்னது என்று தெளிவாக பிடித்துக்கொண்டு ஆயுள் முழுவதும் அதைப் பின்பற்றி உள்ளுக்குள் வணங்குகிறபோது அவர்களுக்கு பளிச்சென்று ஒரு விஷயம் தெரியவரும்.
அதை இறுகப் பற்றிக்கொண்டால், அந்த வழியை செம்மையாகப் பின்பற்றினால், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான், தன் பிரார்த்தனை, தன்
கடவுள், தன் வழி என்று உறுதியாக இருப்பின் அவர்களுக்கும் கடவுள் அறிதல் சாத்தியம். கடவுள் தரிசனம் மரணம்வரை இல்லாவிட்டாலும் மறுபிறப்பில் நிச்சயம் ஏற்படும்.


பிரபஞ்சத்தினுடைய அடிப்படை, எந்த வினைக்கும் சரியான எதிர்வினை உண்டு என்பதுதான். இது பிரபஞ்ச விதியாக கொள்ளப்படுமாயின் இந்தப் பிறவிக்கு எதிர்வினையாக இன்னொரு பிறவி இருந்துதான் ஆக வேண்டும். எப்பொழுது உன் வினை பற்றி உனக்கு பற்று இல்லையோ, வினையை நீ செய்யவில்லை என்று நினைக்கிறாயோ, அப்பொழுது அந்த வினையை ஏற்காத உன் ஆன்மா நல்ல நிலைக்குப் போய்விடுகிறது. மறுபிறப்பற்று சுதந்திரமாகிறது என்றும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விஞ்ஞான வளர்ச்சிகள் அத்தனையும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற அத்தனை ஆட்டமும் மரணத்திற்கு எதிரானவை. பிறப்பு பற்றி கேள்வி கேட்டு அலைபவை. எங்கிருந்து இது பிறந்தது என்று ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து வியப்போடு கேட்பவை. ஏன் மரணமடைந்தது என்று திகைத்து நிற்பவை. இந்தப் பிறப்பின் வியப்பும் மரணத்தின் திகைப்பும் மனிதனுக்கு இன்றுவரை அடங்கவில்லை. மரணத்திற்குப் பிறகு ஒன்றுமில்லை. வெறும் வெற்றிடம் என்று சொல்கிற விஞ்ஞானிகள் உண்டு. என்ன என்று தெரியாததாலேயே எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

கடவுள் இருக்கிறது என்று சொல்வதாலேயே, இல்லை என்று நாத்திகவாதம் எழுந்ததுபோல, கடவுளைத் தேடாமல் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்ததுபோல, இறப்புக்குப்பிறகு என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால் ஒன்றுமில்லை வெற்றிடம், வெறுமை என்று சூன்யவாதத்தில் சில விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கடவுளைத் தேடி தவிப்பவர்களுக்கு ஞானிகள் மிக அற்புதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள். என்னுடைய பார்வை தீட்சண்யத்தால் உனக்குள் எதுவும் நிகழ்ந்து விடாது என்று புத்தர் சொல்கிறார். அதுமட்டுமல்ல, நீ ஆழ்ந்து கடுமையாக உழைத்தாலன்றி உன்னை யார் என்று கண்டுகொள்ள முடியாது என்று எச்சரிக்கையும் விடுகிறார். ஒவ்வொரு தனிமனிதனும் தானாகக் கடவுள் தேடுதலில் தேர்ந்து மூழ்கினாலொழிய கைவராது என்று சொல்கிறார்.
‘‘நீங்கள் அருள் செய்யக் கூடாதா, ஞானம் வழங்கக் கூடாதா?’’ என்று பகவான் ரமண மகரிஷியை சிலர் கேட்டபோது, ‘‘என்னுடைய அருள் எப்பொழுதும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. சிலபேர் அதைத் தெளிவாக உணர்ந்து, தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு போகிறார்கள். என்ன செய்வது என்று புரிந்துகொள்கிறார்கள். சிலர் வெறுமே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  வெறுமே கேள்வி கேட்பவருக்கு மௌனம்தான் என் பதில்’’ என்று முடித்து விடுகிறார்.
கடவுள் தேடல் சலசலப்பான விஷயமல்ல. பேசிப் பேசி ஒருநாளும் கண்டுகொள்ள முடியாது. இந்தக் கட்டுரையெல்லாம் கூட உங்களைக் கடவுள் தேடலுக்கு அருகே கொண்டுபோய் விடாது. மாறாக குழப்பத்தில் சேர்க்கலாம். ‘என்ன சொல்ல வருகிறாய் நீ?’ என்று தலையில் அடித்துக் கொள்ளலாம். ‘இந்த ஆள் சொல்வது ஒன்றுமே புரியவில்லையே’ என்று கோபப்படலாம். கலக்கமடையலாம். ஆனால் கலங்கியதுதான் தெளியும்.

அர்ஜுனன் கலங்கினான். குருமார்களை, சகோதரர்களை, உறவினர்களை கொல்ல வேண்டுமே என்று கலங்கினான். இந்தக் கலக்கத்திற்கு விஷாத யோகம் என்று பெயர். இப்படி கலங்கியதால்தான் அவனுக்கு தெளிவு வந்தது. உள்ளுக்குள் துக்கப்பட்டு ‘இது என்ன, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?’ என்று பரிதவித்து எழுந்ததால்தான் அவனுக்கு கிருஷ்ணர் சொன்னது புரிந்தது. அப்பொழுதும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறியபோது கடவுள் விஸ்வரூபத்தைக் காட்டினார் என்று சொல்லப்படுகிறது.
பரிதவித்து எழும்போதுதான் இதெல்லாம் நடைபெறுகிறது. எனக்கு என்ன பெயர், இந்த மனிதர்களோடு எனக்கு என்ன உறவு, இந்தப் பூமியில் இன்னும் நான் எத்தனை நாள் என்று பெரிய பெரிய கேள்விகள் உங்களை கடுமையாக தாக்குமாயின், அப்பொழுது அகமலர்ந்து சாய்வீர்களே, அந்த நேரத்தில் உங்களுக்குள் கடவுள் தேடலின் விதை நடப்படலாம்.
மதம் ஒரு சிறிய வழிகாட்டி. மெல்ல கைபிடித்து ஒரு அளவுவரை குருமார்கள் கூட்டிக்கொண்டு போவார்கள். சில சந்தேகங்களை தீர்ப்பார்கள். இந்தக் கட்டுரைத் தொடரும் அதைத்தான் செய்யும். ஒரு அளவுவரை கைபிடித்து அழைத்துப்போகும். என்ன என்று உங்களைக் கேட்க வைக்கும். யாரோ சிலருக்கு மட்டும் இந்தக் கேள்விகள் பலமாகவும் உள்ளத்தை உலுக்குகிற விதமாகவும் எழும். அப்படி கேள்விகள்
எழும்பியவர்கள் புண்ணியசாலிகள்.
இன்றில்லாவிடில் என்றேனும் ஒருநாள் அவர்கள் தெளிவாவார்கள்.

அஸதோமா சத்யகமய
தமசோமா ஜோதிர்கமய ம்ருத்யோமா அம்ருதம் கமய
அசத்யமான, சத்தேயில்லாத விஷயங்களிலிருந்து சத்துள்ள விஷயத்திற்கு, தாமசமான சோம்பலில் இருந்து விடுபட்டு ஒளிமயமான இடத்திற்கு, எது
மரணமோ அதிலிருந்து நகர்ந்து, நிரந்தரமானதிற்கு முயற்சிப்போமாக!

ஓம் சாந்தி.... சாந்தி... சாந்தி...!

2 comments:

  1. நமது மனது வேலை செய்து கொண்டிருக்கும். சும்மா இருக்கவே இருக்காது! மனம் வேலை செய்தால் வினை நடக்கும் உருவாகும். வினை இருக்க இருக்க மீண்டும் பிறப்பு!
    http://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. If we do nishkamakarma,there will be null effect so we can easily cross the birth cycle

      Delete