Saturday, December 14, 2013

RUKMINI KALYANAM & SUDHAMA CHARITHAM


Velukkudi Krishnan Swamy Sydney 2012 Why Bad things happen to Good p...


ஸ்ரீராமஜெயம் எழுதினால் என்ன பயன் கிடைக்கும்?


 

                             குறிவைக்கத் தைக்கும் ராமசரம் என்பார்கள். ராமபாணம் எப்படி இலக்கை நோக்கிப் பாயுமோ, அதுபோல ராமநாமம் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வல்லமை கொண்டது. நம்பிக்கை யுடன் செய்தால் பலன் நிச்சயம். குறைந்தது ஒருநாளைக்கு 108 முறை எழுதுவது அவசியம்.

மறந்தால் தானே கஷ்டம்
                           சீதையை அசோகவனத்தில் சந்தித்து வந்த அனுமன், ராமனிடம் கண்டேன் சீதையை என்று சொல்லியபடி தெற்கு நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். கைகளில் சூடாமணியை பெற்றதும் ராமரின் கண்களில் கண்ணீர் மல்கியது.  பிரபு! தேவி கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களின் திருநாமத்தை மறந்தால் தான் கஷ்டம் வரும். பிராட்டியோ எப்போதும் தங்கள் பெயரையே, (ராமநாமம்) ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு கஷ்டம் என்பதே கிடையாது, என்று அனுமன் அவருக்கு ஆறுதல் அளித்தார்.  ராமர் அவரை ஆரத்தழுவி, அனுமான்! உன்னிடம் நான்பட்ட கடனை எப்படித் தீர்ப்பேன்?, என்றார். அனுமனின் உடல் அப்படியே சிலிர்த்துப் போனது. பகவானே! என்ன சொல்லிவிட்டீர்கள்? என்னைக் காப்பாற்றுங்கள்! என்று ராமரின் திருவடிகளில் சரணடைந்தார்.  அப்போது கருணையுடன் அனுமன் தலையை கோதியபடி ராமர் ஆசி வழங்கினார். துளசிதாசர் ராமாயணத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம் என்ன?

                    வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, லட்சுமி, முருகன் ஆகியோருக்கு உரியது. இதனை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். வாகனயோகம் அமையும். ஆடி, தை வெள்ளிகளில் மேற்கொள்வது இன்னும் சிறப்பு.


ஊழ்வினை என்பது உண்மையா?

                             ஊழிற் பெருவலி யாவுள என்று திருவள்ளுவரும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று இளங்கோவடிகளும் ஊழின் வலிமையைக் குறிப்பிட்டுள்ளனர். முன்வினைப் பயனை விட வலிமையானது வேறில்லை. அது அவரவரை மட்டுமல்ல! அவரது வம்சத்தையும் சாரும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவர் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைக்கான பாவபுண்ணியத்தை அடைந்தாக வேண்டும் என்னும் கர்மவினைக் கோட்பாட்டை இந்தியச் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை ஏற்காவிட்டாலும் மனமறிந்து நாம் பாவம் செய்வது கூடாது என்பதை எல்லா மதங்களும் ஒத்துக் கொள்கின்றன


மனிதனைப் பாடாதே! இறைவனைப் பாடு!


மன்னர்கள் தரும் செல்வத்தைப் பெரிதாக நினைக்காமல், கடவுளை மட்டுமே சிந்தித்த மகான்கள் பலர். சரபோஜி மன்னர் கொடுத்த பொருளைக் காட்டிலும், ராம பக்தியே பெரிது என்று பாடிய, ராஜாவுடைய நிதி சவுக்யம் தருமா? ராமனுடைய சந்நிதி சவுக்யம் தருமா?, என்ற தியாகராஜரின் பாடல் புகழ்பெற்றது. சுந்தரர், அவனையும் இவனையும் பாடாதீர்கள். சிவனை பாடுங்கள், என்று வழிகாட்டுகிறார். மகேந்திரவர்மன் அப்பரை தண்டிக்க ஆள் அனுப்பிய போது, நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்! என்று வீறு கொண்டு எழுந்து நின்றார். நம்மாழ்வார், வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன், என்று மனிதனைப் பாடும் கவிஞன் நான் கிடையாது என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்

ஆன்மிகத்தில் ஒருவர் முழுமை அடைந்துவிட்டார் என்பதை எப்படி அறியலாம்?
 
 
அ-

+


ஆன்மிகம் என்னும் கடலில் கரைசேர்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. விருப்பு, வெறுப்பற்ற ஞானிகளுக்கே பக்குவநிலை கைகூடும். நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடவுளின் திருவடியைக் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியது தான். பரிபக்குவ நிலையை நமக்கு அவர் அருளும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

இன்பமும் துன்பமும் கலந்த முரண்பாடான வாழ்க்கை ஏன்?
                       இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்வு சலித்துவிடும். எல்லாம் துன்பமயம் என்றால் வெறுத்துப் போகும். இன்ப துன்பம் இரண்டும் இரவுபகல் போல நம்மை தொடர்வதால் தான், வாழ்வில் ரசனையே இருக்கிறது. பரமபத விளையாட்டில் ஏணியின் ஏற்றத்திலும், பாம்பின் இறக்கத்திலும் தானே விளையாட்டின் சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது.