Thursday, January 26, 2012

ஆத்திகன் ஆனாலும் அகப்படமாட்டான் நாத்திகன் ஆனாலும் பயப்படமாட்டான் - இறைவனைப்பற்றி சின்மயானந்தர்

            
                      ஆன்மிக உணர்வுக்கு தளர்ச்சி, சோர்வு போன்ற அனைத்துத் தடைகளையும் நீக்கிவிடும் சக்தியுண்டு. தடைபட்ட செயல்களை துரிதப்படுத்தி, வெற்றி பெற வைக்கும் பலத்தை அது தருகிறது.
* மனிதன் பூரண வளர்ச்சியடைய துணை செய்யக்கூடிய சாதனம் தியானம். இதனை தினமும் கடைபிடிப்பது வாழ்க்கைக்கு நல்லது.
* கடவுள் நமது புத்திக்கு எட்டாதவர். எவ்வளவு பெரிய ஆஸ்திகனின் பிடியிலும் அவர் அகப்படமாட்டார். நாத்திகவாதி கண்டும் கலங்கவும் மாட்டார். நம்முடைய எத்தகைய முயற்சியினா லும் அவரை அறிய முடியாது. அவர் அனைவரிடத்திலும் இருக்கின்ற உயிர்த்தத்துவம்.
* கடவுளைப் பற்றி விளக்குவது என்பது முடியாத செயல் மட்டுமல்ல. அவரை விளக்குவது அவரை மாசுப்படுத்துவதைப் போலாகிவிடும்.
* இறைவன் நம்முடைய மனமாகிய வீட்டில் இருந்து இயக்குகிறான், அவன் நமக்குத் தெரியாவிட்டாலும் அவன் அருள், நமது வாழ்க்கையில் பல்வேறு பலன்களைத் தருகிறது.
* மனிதனின் கவுரவம், அவனுடைய புத்திப்பூர்வமான நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழ்வதில்தான் இருக்கிறது.
* தனது அந்தரங்க விஷயங்களை ஒருவர் கையாளும் விதத்தைப் பொறுத்தே, அவரது வாழ்க்கை வெற்றியும், சந்தோஷமும் நிர்ணயிக்கப்படுகிறது.
அறிவு, உணர்ச்சி, குணம் இவை ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. இந்த வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே, மனித இனத்தின் பாகுபாடுகள் உருவாக்கப்படுகிறது.
* நாம் யார், எதற்காக இந்த பூமிக்கு வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் போது தான், நம் குழப்பங்களும், குறைபாடுகளினால் ஏற்படும் ஏக்கங்களும் தீர்கிறது. மாமனித நிலை அல்லது தெய்வீகநிலைக்கு நாம் உயர்கிறோம்.
* செவிகொடுத்து கேட்டால் இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
* மனத்தைக் குவிக்கும் சக்தி எவரிடம் அதிகமாய் இருக்கிறதோ அவருக்கு வெற்றி கிடைக்கும் சூழ்நிலை அதிகமாய் இருக்கும்.
* தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தர உதவும் மண்ணும், நீரும் நமது வழிபாட்டுக்கு உரியவை.
* அன்பு செலுத்தக் கற்றுக்கொண்டால் மனம் தூய்மையாகும். மாறாத அன்பினால், நாம் உலகையே வெற்றி கொள்ள முடியும்.
* பிறரின் மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பம் அடைய வேண்டும், பிறருடைய துன்பத்தில் உண்மையாக பங்கு கொள்ள வேண்டும்.
* சாதாரண ஆசைகளை விட்டுவிட்டு உயர்ந்த பண்புகளுடன் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அரவணைக்க முயலுங்கள். நீங்கள் உயர்ந்தவர்களாகி விடுவீர்கள்.
* உடலுக்குள் உள்ள உறுப்புகள் கண்ணுக்குத் தெரிவதில்லை, ஆனால், அவற்றின் இயக்கத்தை உணருகிறோம். இருதயம் ரத்தத்தை ஓடவைக்கிறது. குடல் உணவை ஜீரணம் செய்கிறது. இதைப் போல இறைவனும் நம்முள் இருந்து நம்மை இயக்குகிறான்.
* ஓர் உயர்ந்த குறிக்கோளில் மனம் ஈடுபட வேண்டும். அந்த குறிக்கோள் இறைவனிடம் பக்தி செலுத்துவதாகும். அதற் குரிய பூஜை, தியானம், பஜனை இவற்றில் முழுமூச்சாக ஈடுபடுவதாகும்

No comments:

Post a Comment