Wednesday, January 2, 2013

வாய்மையே வெல்லுமடா! அதன் வழியிலே நாம் செல்வோமடா!

*எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அச்சம், பகை உணர்வில் இருந்து விடுபட்டவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு தர மாட்டார்கள்.
*கொல்லாமை என்னும் தூயநெறியைப் பின்பற்றினால் வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.
*வாய்மையே உலகில் சிறந்ததாகும். அதன் வழியிலேயே நாம் நடக்க வேண்டும். வாய்மை சந்திர மண்டலத்தை விடத் தூய்மையானது. சூரியமண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கது.
*கடினமானதும், பிறர் மனம் புண்படுத்துவதுமான கடுஞ்சொற்களைப் பேசாதீர்கள். 
*பிறருக்குப் பகிர்ந்து உண்ணப் பழகுங்கள். பிறருக்குக் கொடுக்காமல் எந்தப் பொருளையும் எடுப்பது கூடாது.
*பல் குத்த உதவும் சிறிய குச்சியாக இருந்தாலும் உரியவரிடம் அனுமதி பெறாமல் எடுப்பது கூடாது.
*ஆமை உறுப்புகளை தன்னுள் அடக்கிக் கொள்வது போல, உலக கவர்ச்சியில் இருந்து தன்னை அடக்கப் பழகுபவனே சாதனையாளன்.
*பசியைப் போக்கும் விதத்தில் குறைந்த அளவு உண்பதும், தேவையான சமயத்தில் மட்டும் குறைவாகப் பேசுவதும் நல்லது.
*மனம் விரும்பியதை எல்லாம் எப்போதும் நம்மால் அடைய முடியாது. அதற்காக ஒருபோதும் மனம் தளர்ந்து விடுதல் கூடாது.
*மகிழ்ச்சியால் துள்ளுவதும், துன்பத்தால் துவள்வதும் விரும்பத்தக்கது அல்ல. இன்பத்திலும் துன்பத்திலும் மனச் சமநிலையை இழக்காதீர்கள்.
*கோபம், பொறாமை, நன்றியின்மை, பிடிவாதம் போன்ற தீய குணங்கள் மனிதனை அழிவு பாதையில் தள்ளி விடும்.
*நோயாளிக்கும், நலிவுற்றோருக்கும் சேவை புரிவதற்கு தயாரான மனநிலையில் எப்போதும் இருங்கள்.
*தற்பெருமையுடன் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மனிதர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.
*தர்மம் என்னும் தீப ஒளியை மனதில் ஏற்றி வையுங்கள். இதனால் அஞ்ஞான இருள் நம்மை ஒருபோதும் தீண்டுவதில்லை.
*பின்பற்றுவதற்கு கடினமானதாக இருந்தாலும், தர்மத்தை விடச் சிறந்த பயன் தரும் நெறி உலகில் வேறில்லை.
*பெற்றோர், பிள்ளைகள், சொந்தபந்தம் யாரும் துணைக்கு வரமாட்டார்கள் அவரவர் செய்த தர்மமே ஒருவனுக்கு உற்றதுணையாகும்.
*வெறுப்புணர்வுடன் மற்றவர்களைப் புறக்கணிப்பவன் நீண்டகாலம் பிறப்பு, இறப்பு சுழலில் சிக்கித் தவிக்க நேரிடும்.
*எதையும் யோசித்து நிதானத்துடன் அழகாகப் பேசுபவன் நல்லோர்களின் பாராட்டைப் பெறுவான்.
*பிறர் மீதுள்ள குற்றங்குறைகளையே தேடிக் கண்டுபிடித்து திரியாதீர்கள். உங்களிடமுள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.
*பாவச் செயல்களைச் செய்ய முயலாதீர்கள். பிறரும் செய்வதற்கு தூண்டுகோலாகவும் இருக்காதீர்கள்.
*வியாபாரத்தில் நேர்மையைப் பின்பற்றுங்கள். கபடமாக செயல்படாதீர்கள். நியாயமான வழியில் பொருளைத் தேடுங்கள்.
*பிறர் செய்த உதவியை எப்போதும் நன்றியுணர்வுடன் மதித்துப் போற்றுங்கள். நன்றி யுணர்வு என்பது யானைத்தந்தம் போல மதிப்புடையது.
*அன்பில்லாத மனிதன் பால்சோறு அளித்தாலும் அதில் இனிமையோ சுவையோ இருப்பதில்லை.
*உண்மையான உழைப்பில் கிடைக்கும் ஊதியமே மதிப்பு மிக்கதாகும்.


- மகாவீரர்

No comments:

Post a Comment