Tuesday, February 14, 2012

சொர்க்கத்திற்கு செல்வது எப்படி?

                
                       சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.
ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.
உண்மையே கடவுள். எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும்.
                              
                      ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்.
                                                  

No comments:

Post a Comment