பெரிய மனிதர்கள் என்று புகழப்படுகிறவர்களாக இருந்தாலும், அவர்கள் சொல்வதையெல்லாம் சோதனை செய்து பார்க்காமல், நம்பிச் செயலில் இறங்கிவிடக் கூடாது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். சத்தியமாகிய கடவுளைத் தன்னுடைய இதயத்தில் எப்போதும் வீற்றிருக்கக் காண்பவன் என்றும் முதிர்வடைவதில்லை! எப்பொழுதும் அவன் இளைஞனே ஆவான். சத்தியத்தை தாயின் கட்டளையாக ஏற்று அதற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். கடவுளிடம் நம்பிக்கை வைத்துக் கடவுளுக்கு மட்டும் அஞ்சி நடந்தால் எவருக்கும் நாம் அஞ்ச வேண்டியதில்லை. நோயால் செத்துப் போகிறவர்களைவிட அச்சத்தால் செத்துப் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆகையால் யாரும் அஞ்சாதீர்கள். மக்களுக்கு தொண்டு புரிவதன் மூலம் கிடைக்கும் விசேஷ உரிமைகள் எந்தக் காலத்திலும் அழியாமல் இருக்கும். வெறும் அதிகாரச் சின்னங்களான உரிமைகள் அனைத்தும் அழிந்து போய்விடும்.
உண்மையான அலங்காரம் என்பது உடம்பு முழுவதும் உலோகத்தையும் கற்களையும் சுமந்து கொண்டிருப்பது அல்ல! இருதயத்தைச் சுத்தப்படுத்தி ஆத்மாவின் அழகைப் பெருக்கிக் கொள்வதாகும் என்பதைப் பெண்கள் உணரவேண்டும். கைமாறு கருதாமல் நாமே துன்பத்தை மேற்கொண்டால் நமது அழுகை விண்ணுலகத்திற்கும் எட்டும். கடவுள் அதைக் கேட்டு அருள் புரிவார். இது தான் மதத்தின் உண்மையான பாதை. இந்தியாவைப் பாதிக்கிற மூட நம்பிக்கைகள் எண்ணற்றவை. சுதந்திர உணர்ச்சியை ஊட்டுவதற்கும் கூர்மையான அறிவை அபிவிருத்தி செய்வதற்கும் ஆங்கிலக் கல்வி முறை அவசியமென்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறேமே! அது தான் எல்லாவற்றை யும் விடப் பெரிய மூடநம்பிக்கையாகும்.
ஆசியாவின் பெரியவர்கள் உபதேசித்துச் சென்ற சத்தியம், அன்பு, நெறி என்ற செய்திகளை உலகம் முழுவதும் மக்கள் எடுத்துச் செல்ல வேண்டும். பெண்களின் நிலை உயரும் போது ஆண்களின் நிலையும் உயரும், இவ்விருவரின் நிலையும் உயரும் போது மனித சமுதாயத்தின் நிலைஉயர்ந்து விடும். உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் ஆரோக்கியமும் மன வளமும் அதிகரிக்கிறது. எந்த பெரிய லட்சியத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அதைச் சாதிப்பதற்கு எத்தனை பேர் முன்வருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல; அதற்காக முன்வருபவர்கள் எத்தகைய மனப்பாங்குடையவர்கள் என்பதே வெற்றியை நிர்ணயிக்கும் அம்சமாய் இருக்கும். கடமைகளை மனப்பூர்வமாகச் செய்வதின் மூலம் கிடைக்கும் உரிமைகளைத் தவிர வேறு உரிமை கிடையாது, கடமைகளைச் செய்யாமலே உரிமைகளைத்தேடினால்அதுகானல்நீராகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை, கடமைகளைக் கருதியவர்களே மேன்மை அடைந்திருக்கிறார்கள். கடமையைச்செய்தால் உரிமைகள் தாமாகவே வந்து அடையும்.
-காந்திஜி
No comments:
Post a Comment