வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை.
No comments:
Post a Comment