Tuesday, June 14, 2011

விரதத்தில் எது முக்கியம்?

விரதத்தில் எது முக்கியம்? எந்தக்
கடவுளுக்காக விரதமிருக்கிறோம் என்பதா?
இல்லை.எதன் பொருட்டு விரதமிருக்கிறோம்
என்பதா? இல்லை

                         .இங்கே விரதம்தான் முக்கியம். எப்படி விரதம் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அதிகாலை குளிர் என்பது ஒரு அற்புதமான விஷயம். குளிரோ, மழையோ, வெயிலோ இந்தியாவின் தென்பகுதியில் அதிகாலை குளியல் மிகவும் சுகமான விஷயம். ஐப்பசி, கார்த்திகையில் மழை பெய்து, மார்கழியில் ஆற்று நீர் தெளிவாக இருக்கும். ஐந்து மணிக்கு எழுந்து பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து, ஆற்றுக்குப் போய் இடுப்பளவு நீரில் நின்று, குளிர் தாங்கி, நீரை மேலே இரைத்துக்கொண்டு முகம் துடைத்து, தலையில் தெளித்து, ஆற்று நீரை வணங்கி சடக்கென்று முங்கி எழ, உடம்பெல்லாம் குளிர் பரவி, உடம்பின் சூடு மொத்தமும் கால் வழியே வழிந்து, தண்ணீரோடு கலந்து போவதை உணரலாம். முங்கி முங்கி பத்து நிமிடம் குளித்துவிட்டுக் கரையேற, உடம்பு குளுமையாகி, மனம், புத்தி இரண்டும் மிக அமைதியாக இருக்கும். தலையைத்துவட்டிக் கொண்டு வேட்டியை பிழிந்து மேலே போட்டுக்கொண்டு உலர்ந்த வேட்டியை கட்டிக்கொண்டு, திருச்சின்னங்களோடு மெல்ல கோயில் நோக்கி நடந்தால் மனம் மிருதுவாக இருக்கும்.
மனம் எந்த ஆசைக்கும் ஆட்படாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வழிபாடு என்பது வெறும் வழிபாடாக, கடவுளை வாழ்த்துவதாக மட்டுமே இருக்கும். மற்றபடி உனக்குத் தெரியும், எனக்கு என்ன தரவேண்டுமென்று. வேண்டிய யாவும் தருவாய் நீ.... என்று மனம் அமைதியாக கைகூப்பும்.
ஒரு நாளின் நல்ல துவக்கம் இது. பிறகு பசியை அடக்கி வைக்கும் அளவிற்கு உணவு. அதற்குப் பிறகு அன்றைய வேலைகள். காலையில் ஏற்பட்ட அமைதி மதியம் வரை இருக்கும். பிறகு வேலையின் பளுவோ, பசியின் கிள்ளலோ, அடுத்த மனிதர்களின் ஆவேசமோ, நம்மைத் தாக்கும். சாதாரண மனிதர்கள்தானே, நமக்கும் கோபம் வரும். மாலையில் போய் மறுபடியும் ஆற்று நீராட, முங்கி முங்கி குளிக்க, அழுக்கெல்லாம் போனதுபோல ஒரு அமைதி.
அசூயையெல்லாம் போனதுபோல ஒரு நிம்மதி. ‘அவன் அப்படித்தான் பேசுவான்; நாமும் அப்படிப் பேசமுடியுமா? அவனுக்கு கடவுள் தண்டனை தருவார். நாம் மௌனமாக இருப்பது நல்லது’ என்ற தீர்மானத்தோடு இன்னொரு முழுக்கு. ஆற்றங்கரை ஓரத்திலோ, மண்டபத்திலோ அல்லது வீட்டுத்
திண்ணையிலோ, மேல் மாடியிலோ அமைதியாக அமர்ந்து ஜபம் செய்யலாம். பாட்டுகள் பாடலாம். பிராணாயாமம் செய்யலாம்.
ஒன்பது மணிக்கு உணவு முடித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக உள்ளுக்குள் பார்த்தபடி இருந்துவிட்டு தூங்கப்போகலாம். மனம் என்ன செய்கிறது என்று பார்த்தபடி அமர்ந்திருப்பது ஒரு கெட்டிக்காரத்தனம். நுட்பமான தந்திரம். அங்கு இன்னொரு மனிதர் இல்லை. எவருக்கும் நம்மை பொய்யாகக் காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை.
என் லட்சணம், என்ன தெரியும் எனக்கு, எங்கே உளறினேன், எப்போது பொய் சொன்னேன், ஏன் கோபப்பட்டேன் என்பதையெல்லாம் நன்கு உற்றுப் பார்க்க ஆரம்பிக்கலாம். வெறுமே நடந்தவற்றை திரும்பப் பார்க்கும்போது தெள்ளத் தெளிவாக நம்முடைய தவறுகள் மேலே வந்து மிதக்கும். இந்த
சூட்சுமம் கற்றவருக்கு தோல்வியே இல்லை.
காலை, மாலைக் குளியலும், ஜெபங்களும், குறைவான உணவும், கடவுள் வழிபாடும் தன்னை யார் என்று அலசுகின்ற, தன்னுடைய செய்கைகளை
உன்னிப்பாய் பார்க்கின்ற மனோநிலையை கொடுக்கின்றன. ‘சரணம் சொல்கிறேன்’ என்று கத்திக் கத்தி கலைவதற்கு அல்ல. “எங்க பூஜை நடந்தாலும் சரணம் சொல்றதுக்கு நம்பளதான் கூப்பிடறாங்க. ஏக டிமாண்டு. எல்லாத்துக்கும் போக முடியுமா சொல்லு!” என்கிற பீற்றல் இல்லை.
கோயிலுக்கு குழுவாகப் போகலாம். யாத்திரைக்கு கூட்டமாகப் போகலாம். ஆனால், விரதம் குழுவாகத்தான் இருக்க வேண்டுமா? ஒவ்வொரு நாளும் விரதமிருப்பவர்கள் ஒன்று கூடத்தான் வேண்டுமா? அவசியமில்லை என்பது என் அபிப்ராயம். கூட்டம் சேருகிறபோது புத்தி ஆட்டு மந்தையாகி விடுகிறது; இழுத்த பக்கம் போகிறது. என்ன செய்கிறோம் என்ற தெளிவில்லாது விஷயங்கள் நடக்கின்றன. இந்தக் குளியலும், வழிபாடும், குறைவான உணவும் கோபமாகப் பேசுதலை தடுத்துவிடுகின்றன. அதைத் தவிர அப்படி கோபமாகப் பேசுகிற பழக்கம் இருந்தாலும் விரதமிருப்பதால் அப்படிப் பேசக்கூடாது என்று, கோபம் வரும்போதே உள்ளுக்குள்ளே தடுப்பு ஏற்பட்டு அமைதி வந்து விடுகிறது. கோபம், தடுத்து அமைதி வருவதற்கு பதில் கோபமே எழாத ஒருநிலைதான் உத்தமம். இது குறைவான உணவிலும், குறைவான பேச்சிலும் கிடைக்கும்.
பேச்சு என்பது என்ன? அடுத்த மனிதரோடு பேசுவது மட்டும்தானா, இல்லை. நம்முடைய மனம் இடையறாது பேசிக்கொண்டிருக்கும். எப்பொழுதோ நடந்த சண்டையை மனதுக்குள் திரும்பப் போட்டு, எகிறி பதில் சொல்லிக் கொண்டிருக்கும். அடுத்தமுறை வரட்டும் எப்படிப் பேசுகிறேன் பார் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது
அடுத்தவரை குறை கூறி “எவ்ளோ பெரிய முட்டாளுங்களோட நான் வாழ வேண்டியிருக்கு” என்று அலுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இவையெல்லாம் எப்போது வேண்டுமானாலும் கால் இடறச் செய்து, கோபத்தை வெளியே கொட்டிவிடும். மனம் உள்ளே பேசாதிருக்க உள்ளுக்குள்ளே மந்திர ஜபமோ, சரணமோ செய்து கொண்டிருக்கலாம்.
வீசி அலைகின்ற யானையின் துதிக்கையில்
சங்கிலியை கொடுத்தால், அதைப் பிடித்துக் கொண்டு துதிக்கை அசையாது ஓரிடத்தில் இருப்பதுபோல, மனம் அசையாமல் இருக்க சரணம் சொல்லுதலும், மந்திர ஜெபமும், கடவுள் நாமமும் நல்ல வழி காட்டும். சும்மாயிருக்கும்போதே மனம் ஏகப்பட்டது
பேசுகிறதே, காலை செய்தித்தாள் படிக்கிறபோது அல்லது செய்தியை கேட்கிறபோது அதிகமாக பேச்சு உள்ளுக்குள் கிளறாதா?
கிளறத்தான் செய்யும். இதிலிருந்து விலகி நிற்க முடிந்தால் அது உத்தமமான விஷயம்.
மனதை நிலை குலையச் செய்யும் எந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடாது என்பதுதான் விரதத்தின் முக்கியமான விஷயம். அதனால்தான் துக்க வீட்டிற்குப் போவதோ, சவத்துக்கு எதிரே நடப்பதோ கூடாது என்று சொல்கிறார்கள். ஏனெனில் மரணம் மனதை நிலை குலையச் செய்ய வைக்கின்ற மிகப்பெரிய விஷயம். மது மனதை நிலைகுலையச் செய்ய வைக்கும் விஷயம். அதனால் அதையும் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மது அருந்துகின்ற இடத்திற்கு அருகேகூட போகாதிருக்க வேண்டும். மாமிசம் உடம்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து துள்ளலை தூக்குகின்ற விஷயம். எனவே மாமிசம் உண்ணாமலும் இருக்க வேண்டும். புணர்தல் என்பது சக்தி விரயம். மனதின் பெரிய ஆட்டம். எனவே, அதிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.
இவையெல்லாமே உங்களை உள்ளுக்குள் அமைதியாக பேச்சு மூச்சற்று ஆழ்ந்திருப்பதற்காகச் செய்யும் விஷயங்கள். பேச்சு மூச்சற்று இருப்பது என்பதுதான் இங்கே மிக முக்கியம். பேச்சுக்கு ஏற்ப மூச்சு அலையும். மூச்சுக்கேற்ப பேச்சு அமையும். மூச்சும் பேச்சும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பேசப் பேச  மூச்சின் சுதி அதிகமாகும். மூச்சு தவறாக இருப்பின், விரைவாக இருப்பின், பேச்சு குளறலாக இருக்கும், உளறலாக இருக்கும், அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கும், ஆவேசமாகத்தான் மாறும்.

அதீதமான பேச்சு, அதீதமான மன அலைகளை உண்டாக்கும். மன அலைகள் அதிகரித்தால் மூச்சின் தாளம் கெடும். மூச்சின் தாளம் கெட்டால் நாடிகளின் துடிப்புகள் மாறும். நாடிகளின் துடிப்புகள் மாறினால் இதயமும், இதயத்தால் நுரையீரலும் வெவ்வேறு விதமாக திசை திரும்பும். உணவு செரிமானம் வேகமாகும். பசியெடுக்கும். பசியெடுத்தால் நன்றாக
உண்பீர்கள். நன்றாக உண்டால் இன்னும் அதிகமாகப் பேசுவீர்கள். அதிகமாக ஆடுவீர்கள்....
விரதம் என்பது கேலிக்கூத்தாகப் போகும்.
(தொடரும்)

No comments:

Post a Comment